ஆசான் பள்ளி

ஆசான் பள்ளி

செம்மை ஆசான் பள்ளி

ஆசான் பள்ளி எனும் அமைப்பு பண்டைய தமிழர் வாழ்வியலின் அங்கம். மெய்யறிவுக் கல்வியைச் சமூகத்திற்குக் கற்பிப்பவர் ஆசான்.

ஆசு எனும் சொல் குற்றம் மாசு விரைவு ஆகிய பொருள் கொண்டது. ஆசான் என அஃது விரிகையில் குற்றமில்லாத மாசற்ற விரைவற்ற என்றாகும்.

தான் கற்பிக்கும் கொள்கைகளில் குற்றமில்லாதவன் ஆசான். பொறுமையாக பொறுப்புடன் கற்பிப்பவன் ஆசான் எனப் பொருள் கொள்ள வேண்டும்.

குரு எனும் சொல்லும் ஆசான் என்பதும் ஏறத்தாழ நிகரானவையே. குரு என்பது மிகச் சிறிய அல்லது நுண்ணிய எனப் பொருள் ஆவது. குருவி எனும் பறவை சிறியது நுண்ணிய அசைவு கொண்டது.

குரு எனப் படுபவர் நுண்மையான அறிவுடன் தன்னைப் பெரிதாக்கிக் கொள்ளாமல் இருப்பவர்.

செம்மை ஆசான் பள்ளி செம்மை வனம் எனும் இடத்தில் உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தின் செங்கிப் பட்டிக்கு அருகில் உள்ள ஆச்சாம் பட்டி இதன் அமைவிடம். ஆசான் ம.செந்தமிழனின் தகப்பனார் திரு.பெ.மணியரசன் பிறந்த ஊர் இஃது.

ஆசான் ம.செந்தமிழனின் இருப்பிடமாக செம்மை வனம் உள்ளது. அவரது மாணாக்கர் உடன் இருக்கின்றனர்.

இறைத் தமிழ், இறையியல், இசை, மரபு வாழ்வியல், அண்டவியல், முப்பொருள், செங்கலை வடிவியல், உழிஞை ஆகிய துறைகளில் இங்கு கல்வி கற்பிக்கப் படுகிறது.

செங்கலை வடிவியல் எனப் படுவது பேரண்டத்தின் வடிவக் கொள்கைகளின் தொகை. கோயில் கட்டுமானம் இக் கொள்கையில் இருந்தே வெளிப் படுகிறது. செம்மை வனத்தில் அம்மையப்பர் கோயில் செங்கலை வடிவியல் நுட்பத்தின் வழியாக எழுப்பப் படுகிறது.

உழிஞை என்பது தற்காப்பு எனும் பொருள் கொண்டது. இதற்கு உரிய அடிப்படைப் பயிற்சிகள் இப்போது தொடங்கப் பட்டுள்ளன.

மாணாக்கர் ஆசான் பள்ளியில் தங்கிப் பணிகள் செய்து கல்வி கற்கின்றனர். செம்மை வனத்தின் பராமரிப்பு ஆநிரை தோட்டங்கள் உணவாக்கம் ஆகியவற்றில் மாணாக்கர் ஈடுபடுகின்றனர்.

உழிஞை தவிர்த்த பிற எல்லாத் துறைகளுக்கும் உரிய பாடநூல்களை ஆசான் ம.செந்தமிழன் இயற்றியுள்ளார். அவை இங்கு கற்பிக்கப் படுகின்றன.

நிகழ் துறைகள்

கல்வியினைச் செயலாக நிகழ்த்தும் துறைகளாக இருப்பன
இசை முப்பொருள் செங்கலை வடிவியல் ஆகியனவாகும்.

இசை

செம்மை இசைத் துறை ஏறத்தாழ ஐம்பது இசைக் கலைஞரைக் கொண்டது. குரலிசை கருவி இசை ஆகியவற்றில் இவர்கள் தேர்ச்சி அடைந்து வருகின்றனர்.

முற்றும் முழுதாக தமிழர் மரபின் இசை இலக்கணத்தினை இசை நூலில் ம.செந்தமிழன் பதிவு செய்துள்ளார். அந் நூல்  கொள்கை வழியே இசைக் குறிப்புகளை உருவாக்கி உள்ளார். செம்மை இசைக்கெனத் தனித் தன்மை கொண்ட இசைக் குறிப்புகள் உள்ளன. அக் குறிப்புகளை இசைத் துறை கற்பிக்கிறது.

இசைத் துறை இதுவரை ஏழு இசை நிகழ்வுகளை நடத்தியுள்ளது. பாணிசை, ஒருங்கிசை, பேரிசை ஆகியன அவற்றுள் தனித் தன்மை வாய்ந்தவை.

இந்நிகழ்வுகளில் பலநூறு சுவைஞர் கலந்து கொண்டனர். பேரிசை நிகழ்வில் ஏறத்தாழ 1800 சுவைஞர் பங்கேற்றனர்.

காரைக்கால் அம்மையாரின் அற்புதத் திருவந்தாதிப் பாடல்கள் நூற்று ஒன்று. அவை யாவற்றையும் இடைநிறுத்தாமல் பெருங்குழுவாக இசைத்தல் ஒருங்கிசை. நூற்றொரு பாடல்களை இடைநில்லாமல் நூற்றொரு குரலிசைக் கலைஞர்கள் பாடுதல் பேரிசை.

முப்பொருள்

வாதம் பித்தம் கபம் எனும் முப்பொருள் சேர்க்கையே மாந்தர் ஆக்கை. இதனைக் கொள்கையாகக் கொண்டு நலம் பெறுதலுக்கு உரிய வழிமுறைகளைக் கற்பித்தல் முப்பொருள் துறை.

செம்மை வனத்தில் இக் கொள்கையின் வழியே உடல் நல வழிகாட்டல் வழங்கப் படுகிறது. ஆசானுடன் மாணாக்கர் இணைந்து மக்களுக்கு உரிய நலப் பணிகளில் ஈடுபடுகின்றனர்.

இப்பணியினை செம்மை நலம் எனும் பெயரில் ம.செந்தமிழன் 2013 ஆம் ஆண்டு தொடங்கினார். பல்லாயிரம் மக்கள் கடந்த பதின் மூன்று ஆண்டுகளில் நலவழி காட்டல் பெற்றுள்ளனர்.

உணவுப் பழக்கம் வீட்டு மருந்தாக்கம் புறப் பூச்சு உடல் நீவுதல் நலக் குளியல் ஆகியவற்றினை ம.செந்தமிழனிடம் கற்றுக் கொண்டு மாணாக்கர் பிறருக்குக் கற்பிக்கின்றனர்.

சேலம் போடி காங்கேயம் ஆகிய மூன்று இடங்களில் உள்ள செம்மை மாணாக்கர் தோட்டங்களில் செம்மை நலக் களங்கள் செயல் படுகின்றன.

செங்கலை வடிவியல்

தொன்மையான எண்கோணக் கொள்கையே செங்கலை வடிவியல். யாவும் எண்கோணம் என்பது இதன் மந்திரம். இக் கொள்கை அடிப்படையில் வடிவங்களை எழுப்புதல் தமிழர் மரபு.

செம்மை வனத்தில் எழுப்பப் படும் உரிமைச் சிவனார் கோயில் செங்கலை வடிவியலின் நிகழ்த்துக் களமாக உள்ளது. முழுவதும் செங்கலை வடிவியல் கொள்கையினைக் கொண்டு இக் கோயில் எழுப்பப் படுகிறது.

ஆசானிடம் இதனைக் கற்ற மாணாக்கர் இப் பணியில் ஈடுபடுகின்றனர்.

இசை அரங்கம் உழிஞை அரங்கம் ஆகியனவும் செங்கலைக் கொள்கையினைக் கொண்டே அமைக்கப் படுகின்றன.

உயிரினத் தோற்றத்தினை எண்கோணமாகப் புரிந்து கொள்ளும் செங்கலை வடிவியல் பாடங்கள் கற்பிக்கப் படுகின்றன. இலை பூ காய் கொடி உள்ளிட்ட இயற்கைத் தோற்றங்களின் வடிவ இயல்புகளை மாணாக்கர் ஆய்வு செய்து பாடங்களை விளங்கிக் கொள்கின்றனர்.

இறைத் தமிழ்


பழந் தமிழ் நூல்களுக்கு உரை விளக்கத்தினை ம.செந்தமிழன் வழங்குகிறார். தமிழ்த் துறை மாணாக்கர் சிலர் அதனைக் கற்கின்றனர்.

மாணாக்கர் ஆசானுடன் இணைந்து குறுந்தொகையின் நானூறு பாடல்களுக்கும் உரை எழுதும் பணி தொடங்கப் பட்டுள்ளது.

இவ்வாறு செம்மை வனத்தில் செம்மை ஆசான் பள்ளி செயலாற்றுகிறது.

Institution Image

வருகை மற்றும் தொடர் கல்வி

ஆசான் பள்ளி
செம்மை வனம்,
ஆச்சாம்பட்டி,
செங்கிப் பட்டி அஞ்சல்,
தஞ்சாவூர் மாவட்டம்.

பயிலரங்கம் மற்றும் இசைப் பதிவுக் கூடம்

பட்டினத்தார் பயிலகம்
திருவெண்காடு,
சீர்காழி,
மயிலாடுதுறை மாவட்டம்.

இணையவழிக் கல்வி

ஆசான் மாணாக்கர் கூட்டமைவு
கொள்கைக் கல்வி

1500+
மாணாக்கர்
50+
துறைகள்
40+
நூல்கள்
200+
நிகழ்வுகள்

வருகை கல்வி

தொடர் கல்வி

இணையக் கல்வி

ஆசான் பள்ளியில் இணைய விரும்புவோருக்கு

வகுப்புகளைக் காண

Scroll to Top