பின் செல்ல
சிவபுராணம் உரை விளக்க நூல்

சிவபுராணம் உரை விளக்க நூல்

₹300
நூல் சாரம்

கருவில் திரு உற்ற மாணிக்க வாசகன் அருளிய திருவாசகத்தின் முதல் இயலான சிவபுராணம் – உரை விளக்க நூல். – ஆசான். ம. செந்தமிழன்.

மாணிக்கவாசகப் பெருமான் அருளிச் சென்ற திருவாசகத்தின் முதல் இயலான சிவபுராணத்திற்கு ஆசான். ம. செந்தமிழன் அவர்கள் உரை விளக்கம் எழுதியுள்ளார்கள்.

நூலின் தலைப்பில் “கருவில் திரு உற்ற மாணிக்க வாசகன்” என்ற பெயரடை வழங்கப்பட்டுள்ளது மிகப் பொருத்தம். கருவிலேயே திரு என்று அழைக்கக் கூடிய சிறப்புடன் உதித்தவர் தான் மாணிக்கவாசகர் என்று இவரது சிவபுராண பாடல்களின் பொருளை புரிந்து கொள்கையில் அதனை கற்போர் ஒவ்வொருவரும் வியந்து ஏற்றுக் கொள்வர்.

ஈசனுக்கும் இவருக்கும் இடையே இருக்கும் அந்த நெருக்கம் காதல் பக்தியைக் கடந்த ஓர் உறவு நிலை. அந்த நெருக்கத்தின் உணர்ச்சி நிலை சிவபுராண பாடலில் அவர் எடுத்தியம்பியுள்ள சொற்களின் வழியே நம் நெஞ்சத்துள் ஊடுருவிச் செல்கிறது. அத்தகைய பொருள் விளக்கத்தை ஒவ்வொரு சொல்லிற்கு உள்ளே ஆழ்ந்து பயணித்து ஆசான். ம. செந்தமிழன் அவர்கள் விளக்கி இருக்கிறார்.

ஒரு சொல்லைக் கூட மாணிக்கவாசகப் பெருமான் இறைவனை வெறும் புகழ்வதற்காக மட்டும் பயன்படுத்தவில்லை ஒவ்வொரு சொல்லிலும் ஒரு நுட்பமும் கொள்கையும் பொதிந்துள்ளது என்று ஆசான் இந் நூலில் கூறி இருக்கிறார். ஆம் உண்மைதான் பேரண்டக் கொள்கை புவிக் கொள்கை உயிரினக் கொள்கை பிறவிக் கொள்கை வண்ணக் கொள்கை ஐம்பூதக் கொள்கை போன்ற அறிவியல் கொள்கைகள் இன்னும் எண்ணற்ற கொள்கைகள் சிவபுராணம் முழுவதும் நிறைந்து இருக்கின்றது என்று ஆசானின் சிவபுராண விளக்க உரையைப் படிக்கையில் புரிந்து கொள்ள இயலும்.

வாழும் பொழுதே வீடு பேறு அடைதல் என்ற உண்மையை ஆசான் சிவபுராணப் பாடல் வழியே விளக்கி இருக்கிறார்.

எப்பிறப்பிலும் கிடைக்காத தம் உயிரை தாமே உணரும் மனிதப் பிறவி நிலையின் மகத்துவத்தை மாணிக்கவாசனார் பதிவு செய்துள்ளார்.
இறைவனை நாம் நெருங்குவது எவ்வாறு என்று அல்லாமல் இறைவன் நம்மை நெருங்கி வருபவன் அதற்கு உரிய தகுதியை அடைவது எவ்வாறு என்ற வழிகளை அடுக்குகிறார் மாணிக்கவாசகப் பெருமான்.

“சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்து” என்று இறுதிப் பாடலில் சொல்லின் பொருளினை உணர்ந்து பாடுமாறு பணிக்கிறார் மாணிக்கவாசகர்.

ஒவ்வொரு சொல்லையும் அதன் பொருளையும் அந்த சொல்லின் வேரில் இருந்து விளக்கி இருக்கிறார் ஆசான். இதை விட வேறு பேறு கிடைக்க வேண்டுமா? அவன் அருளால் தான் அவர் தாள் பணிய இயலும் என்று கூறும் அந்த கருவிலேயே திரு உற்ற மாணிக்க வாசகன் ஆசான் வழியாக நமக்கு சிவபுராணத்தின் பொருள் விளக்கத்தை அருளிச் செய்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும். சிவபுராணம் சிவபுரத்து வாயிலைத் திறந்து வைத்து அதன் உள்நுழைவதற்கான பாதையை மாந்தருக்கு அருளுகிறது. சிவபுராண விளக்க உரை இறைவனின் பேரருள்!

செம்மை நூல்களை +91 9884001889 என்ற WhatsApp எண்ணில் பெறலாம்.
செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
Scroll to Top